Home Free Medal Donate
Shroud of Turin Top

Welcome to Holyface Devotion

இயேசுவின் திருமுக பக்தி பற்றி

1945- ஆம் ஆண்டில் இறையடி சேர்ந்த அருட்சகோதரி பியரினா என்னும் ஒரு பெண் துறவி, தூய மரியன்னையாலும் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவாலும் திருமுகப் பக்தியைத் தீவிரமாகப் பரப்புமாறு வலியுறுத்தப்பட்டார். கன்னத்தில் அறையப்பட்டவராய், காறி உமிழப்பட்டவராய், யூதாசினால் முத்தமிடப்பட்டவராய், தமது பாடுகளின் போது இயேசுவிற்கு இழைக்கப்பட்ட எல்லாவித அவதூறுகளுக்குப் பரிகாரமாகவும், மேலும் நற்கருணை ஆண்டவருக்கு நாள்தோறும் நிகழ்கின்ற நிந்தை, ஏளனம், பக்திக்குறைவு, இன்ன பிற அவமானங்களுக்குப் பரிகாரமாகவும் இந்தத் திருமுகப் பக்தி அவசியமானது என்று அந்த அருட்சகோதரிக்கு எடுத்துரைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட பதக்கத்தின் ஒருபுறத்தில், தூய மூடுதுகிலில் காணும் முகச்சாயலும், "இறைவா, உமது திருமுகத்தின் பேரொளி எம்மீது சுடர்வதாக!" (திருப்பாடல் 66:1) என்னும் வாசகமும் பொறிக்கப்பட்டிருந்தன. பதக்கத்தின் மறுபுறத்தில் "ஆண்டவரே, எம்முடன் தங்குவீராக!" என்னும் சொற்களை ஏந்தியவாறு, ஒளிரும் தூய அப்பம் ஒன்று தோற்றமளித்தது.

பெரும் இடர்ப்பாடுகளுக்குப் பின்னர், அந்தப் பதக்கத்தை அச்சில் வார்க்கும் அனுமதியை பெற்ற அருட்சகோதரி பியரினா, அதற்குச் செலவாகும் 11200/- லிராக்கள் (இத்தாலியப் பணம்) தனது மேஜை மீது ஒரு தாளுறைக்குள் வைக்கப்பட்டிருந்த அற்புதத்தை கண்டு வியந்தார்.

தீய ஆவி,இதனால் கோபமும் ஆத்திரமும் அடைந்து அருட்சகோதரி பியரினாவைக் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதுடன், பதக்கங்களைக் கீழே வீசியெறிந்து திருமுகப் படங்களையும் நெருப்பிலிட்டு அழிந்தது.

1940-ஆம் ஆண்டிலே இரண்டாம் உலகப் போரினால் உலகம் பெரும் பாதிப்புக்கு உள்ளாயிருந்த வேளையில், இந்தப் பதக்கம் இத்தாலி நாடு முழுவதும் பரவலாக வினியோகிக்கப்பட்டது. பதக்கத்தின் அற்புதமான ஆற்றலும் ஆன்மீக மற்றும் உலகு சார் பேருதவிகளும் ஏற்கனவே பிரபலமடைந்து இருந்ததால், நண்பர்களும் உறவினர்களும் தம்மைச் சார்ந்த வீரர்கள், மாலுமிகள் மற்றும் விமான ஓட்டிகள் அனைவரும் திருமுகப் பதக்கத்தை அணிந்திருக்குமாறு ஏற்பாடு செய்தார்கள்.

நமது தூய அன்னையின் கூற்றுக்கு ஏற்ப, இறைவனுக்கும் திருச்சபைக்கும் எதிராக இன்றைய உலகில் மலிந்துள்ள வக்கிரத்தையும் வன்முறையையும் மேற்கொள்ளத் தமது இறைமகன் வழங்கிடத் திருவுளம் கொண்டுள்ள பாதுகாப்பு ஆயுதமாகவும், தைரியத்தின் கேடயமாகவும், அன்பு, கருணை ஆகியவற்றின் அடையாளமாகவும் இந்தப் பதக்கம் விளங்குகின்றது. தீய நெறிகள் பரவுகின்ற இந்நாட்களில், மனிதர்களை இறை நம்பிக்கையிலிருந்து திசைதிருப்பிடக் கண்ணிவைத்துச் சாத்தான் காத்திருக்கின்றது. உண்மையான மறைப் பணியாளர்களின் எண்ணிக்கை இப்போது மிகக் குறைவு. இந்நிலையில், தீமைகளையெல்லாம் போக்கிடும் மருந்தாக வாய்த்திருப்பது, மரியாளின் மைந்தன் இயேசுவின் மாட்சிக்குரிய திருமுகம் மட்டுமே.

யார்யார் இந்தப் பதக்கத்தை அணிந்து, வாரத்தில் ஒருமுறையேனும் செவ்வாயன்று தூய நற்கருணை ஆண்டவரைச் சந்தித்து, நமது தூய மீட்பரின் திருமுகத்துக்கு நேர்ந்த கொடிய பாடுகளுக்கும், அவரது இறையன்பின் அருளடையாளத்திற்கும் நாள்தோறும் இழைக்கப்படும் அவமானங்களுக்கும் பரிகாரம் செய்கின்றார்களோ, அவர்களுக்கு உலகின் அனைத்து உள்ளரங்க வெளியரங்க இடர்களை வெல்லும்படியான ஆற்றல் மிக்க விசுவாசமும் அருளும் பரிசாக வழங்கப்படும். அன்றியும், கிறிஸ்துவின் சிறப்புத் துணையுடன் அவர்களுக்கு மகிழ்ச்சியான மரணமும் வாக்களிக்கப்படுகின்றது.

முதன்முதலாக இந்தத் திருமுகப் பதக்கம் மாண்புமிக்க நம் திருத்தந்தை பன்னிரண்டாம் பத்திநாதருக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திருமுகப் பதக்கத்தின் பக்தியும் பலன்களும் உலகெங்கும் பெருமளவில் உணரப்பட்டன. நிலத்தின் மீதும், கடலின் மீதும் அது சிறப்பான இடத்தைப் பிடித்துக் கொண்டது. மீட்பின் அணிகலனாகிய இந்த பதக்கத்தை சூடியிருந்த எந்தவொரு போர்க் கைதியுடைய தலையும் கொய்யப்பட்டதாகத் தகவல் எதுவும் இல்லை.

தமது திருமுக பக்தியை சிறப்பிக்கும் வகையில், விபூதிப் புதனுக்கு முந்தைய நாளாகிய செவ்வாயை ஒரு விழாவாகக் கொண்டாட வேண்டுமென்று நம் தூய ஆண்டவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Holyface